விபத்தா..? பேராசையா..? கள்ளத்தனமாக நடந்த பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து.. 2 பேர் பலி.. ஒருவர் படுகாயம்…!

By Swetha on வைகாசி 28, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஒரு பெண் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தின் காட்டுப் பகுதியில், உரிய அனுமதியின்றி தற்காலிகமாக ஒரு கட்டிடத்தில் இந்த பட்டாசு தயாரிக்கும் பணி நள்ளிரவில் நடந்துள்ளது. அப்போது மருந்து கலவைகளை கையாளும்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் அதிர்வால் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கட்டிடம் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி புளியங்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன் (30) மற்றும் விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாலதி (25) ஆகிய இரு தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், மாலதியின் கணவரான சூர்யபிரகாஷ் (25) என்பவர் சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டனர். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நிலத்தின் உரிமையாளர் குருநாதன் மற்றும் பட்டாசு தயாரிப்பில் தொடர்புடைய சரவணன், மாரீஸ்வரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.