திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி, அதற்கு மாற்றாக துவாக்குடி பகுதியில் கைவிடப்பட்ட கல் குவாரிகளில் (பள்ளங்களில்) கொட்டலாம் என்று திருவெறும்பூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (டிவிகே) எம்.எல்.ஏ நாவல்பட்டு விஜி புதிய யோசனை ஒன்றை முன்வைத்தார். குவாரிகளில் குப்பைகளைக் கொட்டினால் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும் என்ற அவரது இந்த விசித்திரமான கருத்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. குவாரிகளில் குப்பைகளைக் கொட்டுவது நிலத்தடி நீரை முற்றிலும் நச்சுத்தன்மையாக்கும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டிவிகே எம்.எல்.ஏ-வின் இந்த யோசனையைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவை இதனுடன் ஒப்பிட்டு கடுமையாக மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்கள் (Trolls) மூலம் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக, மதுரை வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க தர்மாகோல் மிதக்கவிட்ட செல்லூர் ராஜூவின் “அறிவியல் பூர்வமான” நடவடிக்கை தமிழக அளவில் பெரும் கேலிக்குள்ளானது. தற்போது அதே பாணியில், “அன்று செல்லூர் ராஜூ தர்மாகோல் விட்டார்; இன்று டிவிகே எம்.எல்.ஏ பள்ளத்தில் குப்பை கொட்டி புதிய சுற்றுச்சூழல் புரட்சி செய்கிறார்” என்று நெட்டிசன்கள் இருவரையும் ஒப்பிட்டு இணையத்தில் நகைச்சுவையான ட்ரோல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளுக்கு மாறாக உள்ள இந்த திட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் தொடர் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும், டிவிகே எம்.எல்.ஏ நாவல்பட்டு விஜி தனது கருத்தை நியாயப்படுத்தியுள்ளார். குவாரிகள் இருக்கும் பகுதி தொழிற்பேட்டை என்பதால் குடியிருப்புகள் பாதிக்கப்படாது என்றும், விமர்சனங்கள் வந்தாலும் தனது இந்த யோசனைப் திட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், இத்தொகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் குப்பை மேலாண்மை விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
