தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பானது, விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, விவசாயத் துறையில் இதுவரை இல்லாத ஒரு மோசமான அறிவிப்பாக இது இருக்கிறது என்று சாடிய அவர், தேர்தல் வாக்குறுதியில் மக்களுக்குக் கூறியதைச் சொன்னபடி அரசு நிறைவேற்ற வேண்டாமா என்ற கேள்வியையும் காரசாரமாக எழுப்பியுள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அல்லது வழிமுறைகள் விவசாயிகளுக்கு முழுமையான பலனைத் தராது என்பதால், இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை தவெக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் தனது முடிவை மாற்றி, முழுமையான தள்ளுபடியை வழங்க முன்வர வேண்டும் என்பதே அவரது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
