கோவை மாவட்டம் சூலூர் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் சிறுமியின் உடல் கண்ணம்பாளையம் குளக்கரை அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பு புதரில் வீசப்பட்டது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி கார்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன் (30) ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். போலீசாரைக் கண்டு தப்பியோட முயன்ற கார்த்திக், வீட்டின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்ததில் அவரது கை, கால்கள் முறிந்தன. இதனால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைதிகளுக்கான வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு குற்றவாளியான மோகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர வழக்கில் கைதான கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவர் மீதும் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரும் ஓராண்டுக்கு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர முடியாது. இச்சம்பவம் குறித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்த முதலமைச்சர் விஜய், இந்த வழக்கில் விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு மிக விரைந்து கடுமையான தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
