திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக விளங்கி, அரசியல் கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி முதலமைச்சர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மக்கள் அவருக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ள நிலையில், அவர் தனது பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளட்டும் என்றும் சுரேஷ் கோபி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதலமைச்சர் விஜய் தனது செயல்பாடுகளின் மூலம் திறமையை நிரூபிக்க அவருக்குக் கொஞ்சம் அவகாசம் வழங்க வேண்டும் என்று சுரேஷ் கோபி வலியுறுத்தியுள்ளார். அதற்கு முன்பாகவே அவரை விமர்சிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்று குறிப்பிட்ட அவர், விஜய் இந்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தி மக்களுக்கு ஒரு நல்லாட்சியை வழங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பதவி விலகல் அல்லது மரணம் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் இடைத்தேர்தல் வருவதை ஏற்றுக்கொள்ளலாம் என்றும், ஆனால் அடிக்கடி தேர்தல்கள் நடப்பது மக்களின் நேரத்தையும், பல மாதங்களையும் வீணடிக்கும் சூழலையே உருவாக்கும் என்றும் கூறினார்.
இதே உரையாடலில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்தும் சுரேஷ் கோபி பேசினார். ரஜினியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், ரஜினி அரசியலுக்கு வர விரும்பினால் தாராளமாக வரலாம் என்றும், அவர் தமிழ் மக்களுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எந்த அரசியலாக இருந்தாலும் சரி, அனைவரும் அரசியலுக்கு வந்து ஒட்டுமொத்த உலகிற்கும், குறிப்பாகத் தமிழ் மக்களுக்கும் பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
