காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தினமும் காலை 7 மணியளவில் குளித்துவிட்டு கல்லூரிக்குத் தயாராவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதேபோல நேற்று காலையும் அந்த இளம்பெண் கல்லூரிக்குச் செல்வதற்காகக் குளித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்ளூர் நிர்வாகியான தியாகு (வயது 32) என்பவர் கழிவறை ஜன்னல் வழியாக அத்துமீறி எட்டிப் பார்த்துள்ளார். இதனை எதிர்பாராமல் கவனித்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், சற்றும் தாமதிக்காமல் வெளியே வந்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் பெற்றோரின் உதவியுடன் மணிமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். தவெக நிர்வாகி தியாகு தான் குளிப்பதைத் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததாகவும், அதை அவர் தனது செல்போனில் வீடியோ எடுத்திருப்பாரோ என்ற பலத்த சந்தேகம் உள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட மணிமங்கலம் போலீசார், அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த தியாகுவை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். முதலில் அக்குற்றச்சாட்டை மறுத்து மழுப்பிய தியாகு, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்ததை ஒப்புக்கொண்டார்.
இளம்பெண்ணின் சந்தேகத்தின் பேரில் தியாகுவின் செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார், அதில் வீடியோ எதுவும் பதிவு செய்யப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டுள்ளதா (Delete) என்பதைக் கண்டறிய சைபர் க்ரைம் ரெக்கவரி பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தியாகு இதுபோல ஏற்கனவே வேறு பெண்களிடமும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தியாகு மீது வழக்குப் பதிவு செய்த மணிமங்கலம் போலீசார், அவரை நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தவெக நிர்வாகி ஒருவர் இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த விவகாரம் மணிமங்கலம் பகுதி மக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
