2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சியமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், புதிய அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நடந்தபோது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் திடீர் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பு அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்த உட்கட்சி மோதலால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, தவெகவுக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகளைப் பறித்ததோடு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு அளித்தது. இத்தகைய கடுமையான நடவடிக்கைகளுக்குப் பயந்து, அதிமுக தரப்பிலிருந்து தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது பதவிகளை அடுத்தடுத்து அதிரடியாக ராஜினாமா செய்தனர். பின்னர் அவர்கள் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.
இந்த அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் மூத்த முகமும், ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவருமான அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய அவர், பின்னர் தனது கைப்பட எழுதி மீண்டும் ஒரு மனுவைக் கொடுத்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட முக்கியத் தலைவரான இசக்கி சுப்பையாவும் தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகும் தகவல்கள், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த அடுத்தடுத்த 4 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாக்கள் மற்றும் ஏற்கனவே முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்று காலியாக வைத்துள்ள திருச்சி கிழக்கு தொகுதி ஆகியவற்றின் காரணமாக, தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 லிருந்து 229 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான மேஜிக் எண் 116 ஆகக் குறைந்துள்ளதால் விஜய்யின் கை ஓங்கியுள்ளது. தற்போது தவெகவுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், அமைச்சரவையில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் பலமே அரசைத் தக்கவைக்கப் போதுமானதாக மாறியுள்ளது. இதனால் வெளியிலிருந்து ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தயவு இல்லாமலேயே தவெக அரசு தப்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் பல எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, வரும் இடைத்தேர்தலில் அந்தத் தொகுதிகளைக் கைப்பற்றி முழுமையான தனிப்பெரும்பான்மை ஆட்சியை நிறுவ விஜய் தரப்பு மாஸ்டர் பிளான் போட்டு வருகிறது.
