தமிழக காவல் துறையின் உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றங்களின்படி, சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.அருண் ஐ.பி.எஸ், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, கட்டாய காத்திருப்புப் பட்டியலில் இருந்த டி.எஸ்.அன்பு ஐ.பி.எஸ் புதிய சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்; சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த மகேஸ்வர் தயாள் ஐ.பி.எஸ் நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற கையோடு சட்டம்-ஒழுங்கு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுகளில் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், த.வெ.க அரசின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வாகனப் பேரணிகளுக்கு அனுமதி மறுத்தது மற்றும் தலைவர் விஜய் மீது வழக்குத் தொடர்ந்தது போன்ற காரணங்களால் அருண் ஐ.பி.எஸ் மீது த.வெ.க தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்து, அவர் தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டிருந்தார். இதனால், தங்களை எதிர்த்த ஒரு அதிகாரியையே முதல்வர் விஜய் தற்போது மிக முக்கியமான ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக்கியிருப்பது அரசியல் களத்திலும் த.வெ.க ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் விவாதங்களை பற்றவைத்துள்ளது. விஜய்க்கு யாரோ தவறான ஆலோசனை வழங்கி திசைதிருப்பியுள்ளனர் என்று ஒரு தரப்பு தொண்டர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மறுபுறம், அருண் ஐ.பி.எஸ் சட்டம்-ஒழுங்கை கையாள்வதில் சமரசம் செய்யாத கண்டிப்பான அதிகாரி என்பதால், ஊழலை ஒழிக்க இவரே சரியான தேர்வு என விஜய்யின் முடிவை ஆதரிப்பவர்கள் முட்டுக் கொடுத்துப் பேசுகின்றனர். அதே நேரத்தில், கடந்த தி.மு.க ஆட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த அருண், முன்னாள் தி.மு.க அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு வழக்குகளை எப்படி சுறுசுறுப்பாகக் கையாள்வார், அவர் தி.மு.க-விற்கு நெருக்கமானவராகச் செயல்பட வாய்ப்புள்ளதே என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும், கடந்த கால மோதல்களைப் புறந்தள்ளி திறமையின் அடிப்படையில் விஜய் எடுத்துள்ள இந்த முடிவு புதிய அரசின் அதிரடி வியூகத்தைக் காட்டுகிறது.
