விஜய்யின் ‘ஆபரேஷன் க்ளீன்’..! சென்னை கமிஷனராக இருந்த அருணுக்கு முதல்வர் விஜய் கொடுத்த ‘பவர்புல்’ போஸ்டிங்.. ஆடிப்போன அதிகாரிகள் வட்டாரம்..!!

By Muthu Mani on வைகாசி 26, 2026

Spread the love

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை முன்னாள் காவல் துறை ஆணையர் அருண் ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக (ஏடிஜிபி) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மகேஷ்வர் தயாள் நிர்வாகத் துறை ஏடிஜிபியாகவும், அன்பு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றது முதல் நிர்வாக ரீதியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில், திமுக ஆட்சியில் முக்கியப் பதவிகளில் இருந்த அருணுக்கு தற்போது தவெக ஆட்சியில் முக்கியப் பதவி ஒதுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

முன்னாள் ஆணையர் அருணுக்கு முக்கியப் பதவி வழங்கப்பட்டதற்கு தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த தேர்தல் நேரத்தில் தவெக தலைவர் விஜய் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள அருண் அனுமதி மறுத்ததும், சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்ததில் இவருக்கு முக்கியப் பங்கு இருந்ததும் இந்த எதிர்ப்பிற்கு முக்கியக் காரணங்களாகும். இருப்பினும், அதிகாரிகள் ஆளும் வர்க்கத்தின் வழிகாட்டுதலின்படியே செயல்பட வேண்டிய நிர்பந்தம் உள்ளது என்றும், சென்னையில் ரவுடிகளை ஒடுக்கி சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டியதில் அருண் ஒரு தேர்ந்த மற்றும் அதிரடியான அதிகாரி என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

   

திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளாக உள்ள சூழலில், தவெக அரசுக்கு சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் ஊழல் தடுப்பு என்பது மிக முக்கியமான சவாலாகும். இதனால் காவல்துறையைக் கட்டுக்கோப்புடன் வழிநடத்த அருண் போன்ற திறமையான அதிகாரிகளின் தேவை இருப்பதாக முதலமைச்சருக்குப் பரிந்துரைகள் சென்றுள்ளன. அருண் மீதான விமர்சனங்கள் மற்றும் அவரது திறமைகள் ஆகிய இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்த முதலமைச்சர் விஜய், கடந்த காலப் பாகுபாடுகளைப் புறந்தள்ளி, திறமையான அதிகாரிகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கலாம் என்ற முற்போக்கான முடிவின் அடிப்படையில் இந்த நியமனத்திற்குச் சம்மதித்துள்ளார்.