மழையோடு வந்த எமன்.. ஒரே நொடியில் அனாதையான பிள்ளைகள்.. மின்னல் தாக்கியதில் கணவன்- மனைவி பலி..!

By Swetha on வைகாசி 26, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூரைச் சேர்ந்த சுரேஷ் (42) மற்றும் அவரது மனைவி மஞ்சுளா (39) ஆகிய தம்பதியினர், கடந்த மூன்று மாதங்களாக மூப்பன்சாலை பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று மாலை வழக்கம் போல் தங்களது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் மற்றும் மஞ்சுளா ஆகிய இருவரையும் திடீரென மின்னல் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த தம்பதியினர் இருவரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், தம்பதியினர் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

   

இந்தத் துயரச் சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சுரேஷ்-மஞ்சுளா தம்பதியினருக்கு பிரியா (18) என்ற மகளும், கதிரேசன் (16) என்ற மகனும் உள்ளனர். கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த தம்பதியினர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.