“காத்து எங்க பக்கம் வீசுது பாஸ்”… சபாநாயகரை சந்தித்த வேலுமணி… அதிமுகவில் தலைகீழாக மாறிய அரசியல் கணக்கு… இபிஎஸ் எடுத்த விஸ்வரூப முடிவு…!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

அதிமுகவில் தேர்தல் தோல்விக்குத் பிறகு வெடித்த உட்கட்சி மோதல், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை மற்றும் மீண்டும் போர்க்கொடி தூக்கும் அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தனி அணியாகச் செயல்படத் தொடங்கினர். இந்தச் சூழலில், சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, உட்கட்சிப் பூசலையும் பகிரங்கப்படுத்தியது.

இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி தரப்பும், அதற்கு எதிராக வேலுமணி தரப்பும் சபாநாயகரிடம் மனுத் தாக்கல் செய்ததால் மோதல் தீவிரமடைந்தது. தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என்று அதிருப்தி அணி எதிர்பார்த்த நிலையில், அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர்கள் மீண்டும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட முயன்றனர். எஸ்.பி.வேலுமணியின் சமரச சிக்னலைத் தொடர்ந்து, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரான எம்.எல்.ஏ சுகுமார், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியது கட்சியில் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்பட்டது.

   

இருதரப்பும் இணைந்து செயல்படத் தயாரான போது, சில முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் மற்றும் சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட மனுக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட 36 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மீண்டும் அதே பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும் வேலுமணி – சி.வி.எஸ் தரப்பு வலியுறுத்தியது. ஆனால், கட்சியில் ஒழுங்கும் கட்டுப்பாடும் முக்கியம் என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிடிவாதமாக இருந்ததால், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

   

எடப்பாடி பழனிசாமியின் இந்த உறுதியான நிலைப்பாட்டால் அதிருப்தியடைந்த வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு, தற்போது மீண்டும் அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, சபாநாயகரைச் சந்தித்து சட்டசபை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியையும், கொரடாவாக விஜயபாஸ்கரையும் அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். எடப்பாடி தரப்பின் பிடிவாதத்தால் அதிமுக மீண்டும் உடையும் நிலைக்குச் சென்றுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கணித்தாலும், மூத்த நிர்வாகிகள் பலர் இரு அணிகளையும் ஒருங்கிணைக்கத் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.