பெண்களுக்கு வந்தாச்சு செம அப்டேட்!.. மாதம் ரூ.2500 மற்றும் இலவச பஸ் பயணம் எப்போது?.. தவெக அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்..!!!

By Muthu Mani on வைகாசி 25, 2026

Spread the love

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூத்த நிர்வாகியுமான கே.ஏ.செங்கோட்டையன் உடல்நலப் பரிசோதனைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு தினங்களாக மருத்துவமனையில் தங்கி, முழு உடல் பரிசோதனைகளை முடித்துக் கொண்ட அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு புறப்படுவதற்காகக் கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கடந்த 8 மாதங்களாகக் கடுமையான உழைப்பு காரணமாக உடல் பரிசோதனை செய்ய முடியவில்லை என்றும், தற்போது தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அது தனது உறவினரின் மருத்துவமனை என்பதால் எப்போதும் அங்கேயே இலவசமாகச் சிகிச்சை மற்றும் தங்குமிடம் பெறுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்த பெண்களுக்கான முக்கியத் திட்டங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் திட்டம் மற்றும் அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் ‘மகளிர் விடியல் பயணம்’ விரிவாக்கத் திட்டம் ஆகியவை எப்போது செயல்படுத்தப்படும் என்று செய்தியாளர்கள் வினவினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த திமுக ஆட்சியில் இத்தகைய திட்டங்கள் எத்தனை ஆண்டுகள் கழித்து, எப்படி வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் என்று சுட்டிக்காட்டினார்.

   

மேலும், அரசின் ஒவ்வொரு திட்டமும் மாநிலத்தின் நிதி நிலைக்கு ஏற்ப படிப்படியாகவே நிறைவேற்றப்படும் என்றும், எந்தெந்த காலகட்டங்களில் இவற்றை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்பதை முதல்வர் தான் முடிவு செய்வார் என்றும் அவர் கூறினார். எனவே, இது குறித்துத் தன்னிடம் கேள்வி கேட்பது சரியாக இருக்காது என அவர் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்து, விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த முக்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்புகளுக்கு இடையே அமைச்சரின் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.