பாஜகவின் “கனெக்டிங் கால்” ரகசியம்..! எடப்பாடியை முதல்வராக்க துள்ளிக் குதித்த உதயநிதி.. ஆளுநர் கொடுத்த அசைன்மென்ட்… மே 4 துரோகத்தை உடைத்தெறிந்த காங்கிரஸ்..!!

By Soundarya on வைகாசி 25, 2026

Spread the love

முன்னதாக நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவின் வெற்றிக்கு மோடியோ அல்லது அமித்ஷாவோ காரணமல்ல, காங்கிரஸ்தான் காரணம் என்று சாடியிருந்தார். பதவிக்காக எதையும் செய்யக்கூடிய, குறைந்தபட்ச நன்றியோ நாகரிகமோ இல்லாத காங்கிரஸை இனி எப்போதும் நம்பப் போவதில்லை என்றும், அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து ஒரு அதிரடி புகாரை கிளப்பியுள்ளார். கடந்த மே 4-ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, பாஜக தலைவரின் வழிகாட்டுதலின்படி திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக பாஜகவின் முக்கியத் தலைவர் ஒருவர் இரு கட்சிகளுக்கும் இடையே ‘கனெக்டிங் கால்’ மூலம் பேசியதாகவும், அதற்கு ஆளுநரின் மறைமுக ஒத்துழைப்பு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

   

தங்கள் கொள்கைகளைக் குப்பையில் போட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க உதயநிதி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்து துள்ளிக் குதித்ததாக மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். திமுக – அதிமுகவின் இந்த துரோகத் திட்டத்தைக் காங்கிரஸ் கட்சி உடைத்தெறிந்ததால்தான், தற்போது தங்கள் மீது உதயநிதி காழ்ப்புணர்ச்சியோடு பேசி வருகிறார் என்றும், இனி அவர் அளந்து பேச வேண்டும் என்றும் கூறினார். மேலும், எதிர்காலத்தில் பாஜகவுடன் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே கூட்டணி அமைப்பது உறுதி என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.