மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பின்னணியில் நடந்ததாகக் கூறப்படும் அதிரடியான அரசியல் நகர்வுகள் குறித்துப் பகீர் தகவல்களை அவர் வெளியிட்டார். தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துவிடக் கூடாது என்பதில் திமுகவும் அதிமுகவும் தீவிரமாக இருந்ததாகக் குற்றம் சாட்டிய அவர், டெல்லி பாஜக தலைமையின் ஆணைக்கிணங்க இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க திட்டமிட்டதாகத் தெரிவித்தார். கடந்த மே 4-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணியளவில், பாஜகவின் முக்கியத் தலைவர் ஒருவர் இரு கட்சித் தலைவர்களையும் தொடர்புகொண்டு பேசியதாகவும், இந்த ரகசியத் திட்டத்திற்குத் தமிழக ஆளுநரின் மறைமுக ஒத்துழைப்பு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவின் ஒட்டுமொத்தக் கொள்கைகளையும் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு, எப்படியாவது அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தீவிர முயற்சி செய்ததாக மாணிக்கம் தாகூர் கடுமையாகச் சாடினார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு தரக்கூடத் தயாராக இருந்தது என்றும், தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சராக்கி விடக்கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், இறுதியில் மக்கள் தீர்ப்பின் முன்னால் தோற்றுவிட்டார் என்றும் அவர் காரசாரமாகத் தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கத் தோளில் சுமந்த கட்சி காங்கிரஸ் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பொறுப்பான இடத்தில் இருந்துகொண்டு உதயநிதி பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது வருத்தமளிப்பதாகக் கூறினார். திமுக தனது பொய் நாடகங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், வெகு விரைவில் பாஜகவின் துணையோடு அதிமுகவும் திமுகவும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி வைப்பார்கள் என்றும் அவர் கணித்துக் கூறினார்.
திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வன்மமாகப் பேசி, கண்டன தீர்மானம் நிறைவேற்றியதற்குத் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்த மாணிக்கம் தாகூர், பாஜக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் எந்தவொரு தியாகத்தையும் செய்யத் துணிந்துள்ளதாகத் தெரிவித்தார். அதிமுக-திமுக கூட்டணி ஆட்சி என்ற பாஜகவின் ரகசியத் திட்டத்தைக் காங்கிரஸ் கட்சிதான் உடைத்துத் தவிடுபொடியாக்கியது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், அரசியல் ரீதியாகத் தவறாகிவிடும் என்பதற்காகவே காங்கிரஸ் இதுவரை அமைதியாக இருந்ததாகவும் கூறினார். இறுதியாக, தவெக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஆட்சி என்பது மக்களுக்கான சிறந்த ஆட்சியாக இருக்கும் என்றும்; தவெக, காங்கிரஸ், விசிக இணைந்துள்ள இந்த பலமான கூட்டணிக்கு விரைவில் புதிய பெயர் சூட்டப்பட்டு, ஒருமித்த கருத்துள்ள கூட்டணியாகச் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
