கோவை சிறுமி கொலை வழக்கில்.. சிரித்து கொண்டே பதில் அளித்தாரா அமைச்சர் கீர்த்தனா..? இணையத்தில் வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன..?

By Swetha on வைகாசி 24, 2026

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டின்கீழ் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு தரப்பினரும் தவெக அரசுக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழக அமைச்சர் கீர்த்தனா சிரித்துக்கொண்டே பதிலளித்ததாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இந்த வீடியோவை வைத்து அமைச்சரின் உடல்மொழியைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

   

இந்தச் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, தொழில்துறை தொடர்பான கூட்டத்தை முடித்துவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது இயல்பாகவே சிரித்ததாகவும், அது சிறுமி கொலை சம்பவம் தொடர்பான கேள்விகளுக்கான பிரதிபலிப்பு அல்ல என்றும் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காக உண்மையைத் திரித்து, தனிப்பட்ட தருணங்களை அரசியல் ஆயுதமாக மாற்றி ட்ரோல் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்குவதிலும் பெண்களின் பாதுகாப்பிலும் இந்த அரசு எந்த சமரசமும் செய்யாது என்று தெரிவித்துள்ளார்.