சென்னை தண்டையார்பேட்டையில் புதிய மின்மாற்றி அமைக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வரும் சூழலில், அங்கு ஏற்பட்ட தொடர் மின்தடையால் ஆத்திரமடைந்த மக்கள் பழுதுபார்க்க வந்த மின்வாரிய ஊழியர்களை சிறைபிடித்து வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களை மீட்டனர். இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் தெக்களூர் பகுதிகளில் சூறைக்காற்றால் மின்கம்பங்கள் உடைந்ததால் 3 நாட்களாக மின்தடை நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் முட்செடிகளையும் மரங்களையும் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தத் தொடர் மின்தடைப் புகார்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது விளக்கமளித்துள்ளது. நிலத்தடி மின் கம்பி பழுது, மின்மாற்றி கோளாறுகள் மற்றும் திடீர் வானிலை மாற்றங்களே இந்த மின்தடைக்குக் காரணம் என்றும், தமிழ்நாட்டிற்குத் தேவையான போதிய மின்சாரம் தங்கு தடையின்றிக் கிடைப்பதாகவும் மின்வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், தமிழகத்தில் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை எனவும், ஊழியர் பற்றாக்குறைதான் நிலவி வருகிறது என்றும் கூறினார். மேலும், மின்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளும் இந்தத் திட்டமிட்ட குளறுபடிகளுக்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார். இப்பிரச்னைகளை விரைவாகச் சரி செய்ய அனைத்து மின்விநியோக வட்டங்களிலும் நடமாடும் பராமரிப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக தற்காலிக களப்பணிக் குழுக்கள் 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
