சென்னை ஓஎம்ஆர் (OMR) சாலை, சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை எதிரே உள்ள சென்னை மாநகராட்சி பொதுக் கழிவறையில், பிறந்து 10 நிமிடமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் வீசப்பட்டுக் கிடந்தது. அப்போது அங்கு இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பர்வீனா (65) என்ற தூய்மைப் பணியாளர், குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து, உடன் பணிபுரியும் ஜீவா, காமாட்சி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் தங்களது மேற்பார்வையாளர் மூலம் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தூய்மைப் பணியாளர்கள் உதவியுடன் உயிருக்கு விளிம்பில் போராடிக்கொண்டிருந்த குழந்தையை மீட்டனர். பின்னர், ‘பிங்க் பெட்ரோல்’ (Pink Patrol) வாகனத்தில் சைரன் ஒலித்தபடி அதிவேகமாகச் சென்று, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து முதலுதவி அளித்துக் காப்பாற்றினர். பச்சிளம் குழந்தையைக் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்துடன் போலீசார் மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடிய நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, பொதுமக்களின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, வென்டிலேட்டர் வசதி கொண்ட 108 குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையைத் தங்கள் சொந்தக் குழந்தையைப் போலக் கருதி போலீசார் அரவணைத்துக் காப்பாற்றிய இச்சம்பவம் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள செம்மஞ்சேரி போலீசார், பச்சிளம் குழந்தையைக் கழிவறையில் வீசிச் சென்ற கொடூரத் தாய் யார், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
