“பார்க்கவே பயமா இருக்கு… ஹெல்மெட்டுக்குள் மறைந்திருந்த பல்லாயிரக்கணக்கான உயிர்கள்.. அலறியடித்து ஓனர்.. வைரல் வீடியோ”..!!

By Muthu Mani on வைகாசி 23, 2026

Spread the love

வீட்டைச் சுற்றி தேன்கூடு இருந்தாலே பலருக்கு அச்சம் ஏற்படும் நிலையில், ஒருவரின் மிதிவண்டியை (சைக்கிள்) தேனீக்கள் ஆக்கிரமித்த விசித்திரமான சம்பவம் பிரேசிலின் சாவோ பாலோ நகரில் நடந்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று, நபர் ஒருவர் தனது மிதிவண்டியை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மிதிவண்டி மற்றும் தலைக்கவசத்தை (ஹெல்மெட்) பல்லாயிரக்கணக்கான தேனீக்கள் முற்றுகையிட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தார். இது குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பல ஆண்டுகளாக அந்த இடத்திலேயே இருந்தது போன்ற பிரம்மாண்ட வடிவில், ஏராளமான தேனீக்கள் அந்த மிதிவண்டியின் கைப்பிடி மற்றும் ஹெல்மெட் மீது மொய்த்துக்கொண்டு தேன்கூடு போலக் காட்சியளிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக, அந்த நபர் தானாக தேனீக்களை விரட்ட முயற்சிக்காமல், உடனடியாகச் சுற்றுச்சூழல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நிபுணர்கள் குழுவினர், அந்தத் தேனீக்களைப் பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினர்.

   

இப்போது தேனீக்கள் இடம்பெயரும் காலம் என்பதால், அவை மரங்கள், வீட்டின் கூரைகள் அல்லது தங்களுக்குக் கிடைக்கும் இதுபோன்ற ஏதேனும் ஒரு புதிய இடத்தில் தற்காலிகமாகக் கூடுகளை அமைத்துக் கொள்கின்றன என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் மே 20 ஆம் தேதி உலகத் தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த வீடியோ கவனம் பெற்றுள்ளது. மேலும், இதுபோன்ற தேனீக் கூட்டங்களை மக்கள் தாங்களாகவே அகற்ற முயன்று ஆபத்தில் சிக்காமல், நிபுணர்களின் உதவியை நாடுவது பாதுகாப்பானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.