ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதின. இப்போட்டியில் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆர்சிபி அணி சேஸிங் செய்தபோது, இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இறுதியில் ஆர்சிபி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், ஆட்டத்திற்குப் பிந்தைய ஒரு பரபரப்பான நிகழ்வு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்சிபி இன்னிங்ஸின் தொடக்க ஓவர்களில், விராட் கோலியை அவுட்சைடு எட்ஜ் முறையில் ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்திரேலிய வீரரான டிராவிஸ் ஹெட் பவுலருக்கு சில திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கோலி, அடுத்த பந்திலேயே பவுண்டரி விளாசி, “நீயும் வேணும்னா வந்து சில ஓவர்களை வீசிப் பாரேன்!” என்று ஹெட்டைப் பார்த்து ஆக்ரோஷமாகச் சைகை காட்டினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விராட் கோலி 11 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் சாகிப் உசேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கோலி அவுட்டாகி விரக்தியுடன் பெவிலியன் நோக்கி வெளியேறும்போது விடாத டிராவிஸ் ஹெட், “நான் பந்துவீச வருவதற்கு முன்பே நீ அவுட்டாகிட்டியே!” என்று மைதானத்திலேயே அவரை வம்புக்கு இழுத்து ஸ்லெட்ஜிங் செய்தார். இந்த மைதான மோதல் இரு அணிகளின் ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போட்டியின் இறுதிவரை இதன் தாக்கம் நீடித்தது.
போட்டி முடிவடைந்ததும் இரு அணி வீரர்களும் வழக்கமாகக் கைகுலுக்கிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது டிராவிஸ் ஹெட் தனது கையை நீட்டியபடி கோலியை நோக்கி வர, தோல்வி விரக்தியில் இருந்த விராட் கோலி அவரைத் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. ஹெட் நீட்டிய கையை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, அவருக்குப் பின்னால் நின்றிருந்த பேட் கம்மின்ஸ் மற்றும் பிற வீரர்களுக்கு மட்டும் கைகுலுக்கிவிட்டு நேராக நகர்ந்தார். கையை நீட்டியபடி நின்ற ஹெட் ஏமாற்றத்துடன் கடந்து செல்ல, கோலியின் இந்த முதிர்ச்சியற்ற நடத்தை கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தற்போது கடுமையான விமர்சனங்களை ஆளாக்கியுள்ளது.
