ஒரு பெண்ணின் உயிரின் மதிப்பு வெறும் சொத்துக்காகவும், காப்பீட்டுத் (Insurance) தொகைக்காகவும் மட்டுமே சுருங்கிவிட்டதா என்ற அதிர்ச்சிகரமான கேள்வி தற்போது தெலங்கானாவில் எழுந்துள்ளது. தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான மீனாட்சி என்ற இளம் பெண், தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது திட்டமிட்ட கொலை என்று பெண்ணின் வீட்டார் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மீனாட்சியின் கணவர் சிவாஜி, சொத்து ஆசைக்காகவும் மற்றும் ₹1 கோடி மதிப்பிலான காப்பீட்டுத் தொகையை அடைவதற்காகவும் தனது மகளைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாகப் பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு இடையே, கணவர் சிவாஜி கடந்த காலத்தில் மீனாட்சியை மிகக் கொடூரமாகத் தாக்கி, அவரது முடியைப் பிடித்து இழுத்து சித்திரவதை செய்யும் பழைய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த அதிர்ச்சி வீடியோ மற்றும் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தற்பொழுது கணவர் சிவாஜியைக் கைது செய்து தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மீனாட்சியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை வெளியான பிறகே இந்தச் சம்பவம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது முழுமையாகத் தெரியவரும் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.
