விளாத்திகுளம் மாணவி வழக்கில் அதிரடி திருப்பம்!.. இன்னும் சில நாட்களில் வரப்போகும் தீர்ப்பு.. போக்ஸோ நீதிமன்றம் அறிவித்த முக்கிய தேதி..!!

By Muthu Mani on வைகாசி 23, 2026

Spread the love

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், வரும் மே 25-ஆம் தேதி போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்புராஜ் – காளீஸ்வரி தம்பதியரின் 17 வயது மகள், குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 11-ஆம் தேதி இயற்கை உபாதைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற அந்த மாணவி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

   

இதனையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், மறுநாள் காலை அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நபர்களைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான தர்ம முனீஸ்வரன் என்ற வாலிபரின் உடலில் நகக்கீறல்கள் இருந்ததை போலீசார் கவனித்தனர்.

   

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த மாணவியின் நகங்களுக்குள் இருந்த சதைத் துணுக்குகள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ (DNA) சோதனைக்கு அனுப்பப்பட்டன. அந்த டி.என்.ஏ மாதிரிகள் சந்தேகிக்கப்பட்ட தர்ம முனீஸ்வரனின் டி.என்.ஏ-வுடன் நூறு சதவீதம் ஒத்துப்போனதை அடுத்து, அவர்தான் இந்த கொடூரக் குற்றத்தைச் செய்த முக்கிய குற்றவாளி என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், குற்றவாளிக்கான தீர்ப்பு வரும் மே 25-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.