விஜய் தலைமையிலான தமிழக அரசுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு அவர் ஆட்சியை நிரூபித்தார். அப்போது, திரைமறைவு பேச்சுவார்த்தைகள் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் பிரிந்து வந்து விஜய் அரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் அதிமுக இரண்டாக உடைந்த நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று சபாநாயகரிடமும் ஆளுநரிடமும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தால் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்ற விஜய்யின் உறுதிமொழியை நம்பியே இந்த 25 எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்தனர். ஆனால், நேற்று நடந்த தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் 30 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட தாய் கட்சியைப் பகைத்துக் கொண்டு வெளியே வந்த அதிமுக எம்எல்ஏக்கள், தற்போது தங்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானதால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழக அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கையில் ஏற்கனவே 33 இடங்கள் நிரம்பிவிட்டதால், இனி அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பு ஒருபுறமிருக்க, ஊழல் புகாரில் சிக்கியவர்களை அமைச்சரவையில் சேர்த்தால் தவெக அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என விஜய் கருதியதே இதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அர்லேகரும் மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி, இவர்களின் அமைச்சர் கனவு கானல் நீராக மாறியுள்ளது.
இந்தச் சூழல் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளதுடன், பொதுமக்களின் கேலிக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆளாகியுள்ளனர். தவெக ஆட்சியில் பிரதிபலன் கிடைக்கும் என நம்பி ஏமாந்த நிலையில், தங்களின் அரசியல் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ள சில எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணையத் தூது அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. விஜய் தங்களைக் கைவிட்டுவிட்டதால், வேலுமணி மற்றும் சண்முகம் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் விரைவில் எடப்பாடி பக்கம் தாவுவது உறுதியாகியுள்ளது, இது அதிமுகவில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
