“தேர்தல் தோல்விக்கு நடுவே மு.க.ஸ்டாலினுக்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. உச்ச நீதிமன்றத்தில் நடந்த ட்விஸ்ட்… கொளத்தூர் வழக்கில் புதிய திருப்பம்”…!!

By Muthu Mani on வைகாசி 21, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்தாண்டு யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் அதிர்ச்சியாக அமைந்தது கொளத்தூர் தொகுதி முடிவுதான். இத்தொகுதியில் தொடர்ச்சியாக வென்று வந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளரிடம் சுமார் 8,800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இத்தோல்வி மாநில அரசியலில் இன்னும் விவாதப் பொருளாக நீடித்து வரும் வேளையில், மு.க.ஸ்டாலினின் கடந்த காலத் தேர்தல் வெற்றி தொடர்பான 15 ஆண்டு கால பழைய வழக்கு ஒன்றில் இப்போது உச்ச நீதிமன்றத்தில் ஒரு மிகப்பெரிய புதிய ‘ட்விஸ்ட்’ ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனு 2017 ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சைதை துரைசாமி அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்த வழக்கு, கடந்த பிப்ரவரி 19 அன்று நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அமர்வுக்கு முன்பாக இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தது. அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

   

விசாரணையின் போது சைதை துரைசாமி தரப்பில் வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், வழக்கைத் தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதிகள் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். ஆனால், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில், தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு இதிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை முழுமையான மறுவிசாரணைக்காகப் புதிய அமர்வின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீண்டும் பட்டியலிட வேண்டும் என்றும் அந்த அமர்வு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் 2011 தேர்தல் முறைகேடு வழக்கு இப்போது மீண்டும் முதலிலிருந்து விசாரிக்கப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

   

உச்ச நீதிமன்ற நடைமுறைப்படி, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகு நீதிபதிகள் யாராவது ஓய்வுபெறுகிறார் என்றால் மட்டுமே வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றப்பட்டு மீண்டும் முதலிலிருந்து விசாரிக்கப்படும். ஆனால், இந்த அமர்வில் உள்ள நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி வரும் ஜூன் 28 அன்றுதான் ஓய்வுபெறுகிறார்; இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது. மற்றொரு நீதிபதியோ 2029 வரை பதவியில் இருப்பார். அப்படியிருந்தும் தீர்ப்பு வழங்காமல் நீதிபதிகள் விலகியது ஏன் என்ற பெரிய கேள்வி அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய அமர்வின் விசாரணையிலாவது சைதை துரைசாமி தரப்பு வலுவான ஆதாரங்களை முன்வைக்குமா அல்லது இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுமா என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியவரும்.