“கையெழுத்து போடுங்க.. இல்லைனா அவ்வளவுதான்”…. எடப்பாடி பழனிசாமி எடுத்த அவசர முடிவு… மா.செ.க்கள் கூட்டத்தில் வெடித்த ரகசிய பிளான்….!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

அதிமுகவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிந்தைய அரசியல் சூழல், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைமை மீதும், அதன் செயல்பாடுகள் மீதும் தொண்டர்களும், ரத்தத்தின் ரத்தங்களான முக்கிய நிர்வாகிகளும் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், தொண்டர்களின் மனநிலையை விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும், சீனியர்களும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதுவே தற்போதைய அதிமுகவின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

ஆனால், இந்தச் சூழலில் பொதுக்குழுவைக் கூட்டினால் அது தனக்கு எதிரான தளமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அதற்கு உடன்பட மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தவிர்க்க, “தற்போது பொதுக்குழு கூட்டம் கூட்டத் தேவையில்லை” என்று தனது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களிடம் ரகசியமாகக் கையெழுத்துப் பெறும் படலத்தை எடப்பாடி தரப்பு தொடங்கியது. இருப்பினும், இந்த வியூகம் அத்தனை எளிதாக அமையவில்லை. கட்சியின் தற்போதைய நிலையை விவாதிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற பல மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், இந்த கடிதத்தில் கையெழுத்துப் போட திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

   

இந்தக் கையெழுத்து வாங்கும் படலம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே, நிலைமையைச் சமாளிக்க நேற்று அவசரமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டத்தில் எடப்பாடியின் விசுவாசமிக்க சில மாவட்டச் செயலாளர்கள், “அண்ணே, கட்சியில் உங்களுக்குத்தான் இன்னமும் பெருவாரியான ஆதரவு இருக்கிறது. தைரியமாகப் பொதுக்குழுவைக் கூட்டி நமது பலத்தை நிரூபித்து, அதிருப்தியாளர்களின் முகத்தில் கரியைப் பூச வேண்டும்; அவர்களுக்குப் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதை நாம் பகிரங்கமாக அம்பலப்படுத்த வேண்டும்” என்று ஒரு புதிய அரசியல் வியூகத்தை முன்வைத்தனர்.

   

மேலும், தமிழகத்தின் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள விஜய் அவர்களின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக), அதிமுகவின் அதிருப்தி சீனியர்களைத் தன்பக்கம் இழுக்கக் கணக்கு போடுவதாக நிலவும் பேச்சையும் மா.செ.க்கள் சுட்டிக்காட்டினர். “அதிமுகவில் இவர்களுக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை என்பது பொதுக்குழு மூலம் நிரூபணமானால், தவெக இவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காது; இதன் மூலம் தவெக தலைமைக்கு நாம் ஒரு மரண ‘செக்’ வைக்க முடியும்” என்றும் அவர்கள் இபிஎஸ்-யிடம் அழுத்திப் பேசியுள்ளனர். அதிருப்தியாளர்களை ஒடுக்க நினைக்கும் எடப்பாடிக்கு, இந்த யோசனை ஒருபுறம் தைரியத்தைக் கொடுத்தாலும், பொதுக்குழுவில் ஏதேனும் ட்விஸ்ட் நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் அவரிடம் நீடிப்பதாகத் தெரிகிறது.