“அதிகாலை 4 மணிக்கு வந்த ‘அந்த’ மெயில்”…. விடிவதற்குள் நடுரோட்டிற்கு வந்த 8000 ஊழியர்கள்… மெட்டாவின் நள்ளிரவு கொடூரம்…!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் (IT) துறையின் போக்கையே முற்றிலுமாக மாற்றி அமைத்து வருகிறது. கூகுள், ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களுக்கு இணையாக ஏஐ பந்தயத்தில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) தனது ஊழியர்களில் 10 சதவீதம் பேரை, அதாவது சுமார் 8,000 ஊழியர்களை ஒரே இமெயில் மூலம் அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தை மறுசீரமைப்பதாகக் கூறி, புதிய பணியாளர்களை எடுப்பதைக் குறைத்துவிட்டு, ஏற்கனவே இருக்கும் மனித வளத்தை நீக்கிவிட்டு அந்தப் பணத்தை ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது.

இந்த மெகா பணிநீக்க அறிவிப்பானது உலகெங்கிலும் உள்ள ஊழியர்களுக்கு அவர்களின் டைம் ஜோன் (Time Zone) அடிப்படையில் மூன்று பிரிவுகளாக இமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள மெட்டாவின் ஆசியத் தலைமையக ஊழியர்களுக்கு அதிகாலை 4:00 மணிக்கே “உங்களுக்கு வேலை இல்லை” என்ற அதிர்ச்சி செய்தி வந்து சேர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊழியர்களை அன்றைய தினம் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தி, குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு இமெயில் மூலமாகவே இந்த பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், நாளை வேலை இருக்குமா என்ற பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

   

மெட்டாவின் மனிதவள மேம்பாட்டுத் துறை முதன்மை அதிகாரி ஜானெல்லே காலே இது பற்றிக் கூறுகையில், இந்த மாற்றங்கள் வெறும் பணிநீக்கத்தோடு நின்றுவிடாது என்றும், சிறிய குழுக்களை (Teams) அமைப்பதன் மூலம் வேலைகளை விரைவுபடுத்த முடியும் என்றும் விளக்கியுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ், 8000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, 7000 ஊழியர்கள் புதிய ஏஐ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்; மேலும், 6000 காலியிட அறிவிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாகவே இந்த பணிநீக்கத் தகவல்கள் கசிந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சில ஊழியர்கள், அலுவலகத்தில் இருக்கும் இலவச தின்பண்டங்கள் மற்றும் லேப்டாப் சார்ஜர்களை அள்ளிச் செல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

   

இவை அனைத்திற்கும் மேலாக, ஊழியர்களை உளவு பார்த்து அதன் மூலம் மனிதர்களுக்குப் மாற்றாக ஏஐ ஏஜென்ட்களை உருவாக்கும் பகீர் திட்டம் ஒன்றையும் மெட்டா கையில் எடுத்துள்ளது. இதற்காக ஊழியர்களின் லேப்டாப்களில் ‘மாடல் கேப்பபிலிட்டி இனிஷியேட்டிவ்’ (Model Capability Initiative) என்ற சாப்ட்வேரை கட்டாயமாக நிறுவி, அவர்களின் கீபோர்டு மற்றும் மவுஸ் அசைவுகளை மெட்டா கண்காணித்து வருகிறது. இதற்கு எதிராக 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராடினாலும், இந்த ஆண்டு ஏஐ உள்கட்டமைப்புக்காக மட்டுமே $125 பில்லியன் முதல் $145 பில்லியன் டாலர் வரை வாரி இறைக்கத் திட்டமிட்டுள்ள மார்க் ஜுக்கர்பெர்க் தனது முடிவில் உறுதியாக உள்ளார். மெட்டா மட்டுமின்றி சிஸ்கோ, மைக்ரோசாப்ட், அமேசான், ஆரக்கிள் என ஒட்டுமொத்த டெக் உலகமும் இப்போது ஊழியர்களை நீக்கிவிட்டு ஏஐ-யை நோக்கி நகர்வது ஐடி துறையினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.