“அவங்கள நரகத்துக்கு அனுப்பணும்!”…ரூ.558 கோடி பரிசு… டிரம்ப், நெதன்யாகுவை போட்டுக் தள்ள ஈரான் போட்ட மாஸ்டர் பிளான்…!

By Nanthini on வைகாசி 19, 2026

Spread the love

மத்திய கிழக்கில் ஏற்கனவே தணிந்துள்ள போர் பதற்றம், தற்போது மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை கொல்பவர்களுக்கு, இந்திய மதிப்பில் சுமார் 558.87 கோடி ரூபாய் (58 மில்லியன் டாலர்) பரிசுத்தொகை வழங்கப்படும் என்ற அதிரடி மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் தயார் செய்துள்ளது. ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் மூலம் “இஸ்லாமிய குடியரசின் இராணுவ மற்றும் பாதுகாப்புப் படைகளின் பதில் நடவடிக்கை” என்ற பெயரில் இந்த சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்த முதல் நாள் தாக்குதலிலேயே ஈரானின் உயர்மட்ட ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அத்துடன் ஈரானின் போர்க்கப்பல்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் பெரும் சேதத்தைச் சந்தித்தன. இதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல், அமெரிக்காவின் விமானப்படைத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த இந்த நேரடிப் போர் கடந்த மாதம் முடிவுக்கு வந்தாலும், கமேனியின் மரணத்திற்கு பழிவாங்க ஈரான் துடித்துக் கொண்டிருக்கிறது.

   

இதன் தொடர்ச்சியாகவே, கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் டிரம்ப் மற்றும் நெதன்யாகுவை குறிவைக்க ஈரான் இந்த விசித்திரமான மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இது குறித்துப் பேசிய ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் மஹ்மூத் நபாவி, டிரம்ப் மற்றும் நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்பும் எவருக்கும் இந்த பிரம்மாண்ட வெகுமதி வழங்கப்படுவதற்கான வாக்கெடுப்பு விரைவில் நடைபெறும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ஈரானின் அரசு ஆதரவு ஊடகமான ‘மசாஃப்’ (Masaf), “டிரம்பை கொல்லுங்கள்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு, இந்த வெகுமதித் தொகையை மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என பகிரங்கமாக விளம்பரம் செய்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இருப்பினும், உலகிலேயே மிக பலத்த பாதுகாப்பு வளையத்தைக் கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரை நெருங்குவது அத்தனை எளிய காரியம் அல்ல என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதே வேளையில், தங்களது தலைவர்களைக் கொல்ல ஈரான் அரசு மசோதா நிறைவேற்றுவது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளை மேலும் சினமடையச் செய்துள்ளது. இந்த விவகாரம் இருதரப்புக்கும் இடையே உள்ள பகையை மேலும் தீவிரப்படுத்தி, மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் ஒரு பயங்கரமான போர் வெடிப்பதற்கான அச்சத்தை உலக நாடுகளிடையே விதைத்துள்ளது.