நெதர்லாந்து நாட்டிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆனைமங்கல செப்பேடுகள்’ விவகாரம், தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் காலத்துப் பாரம்பரியப் பெட்டகமான இந்தச் செப்பேடுகள் இந்தியா கொண்டுவரப்பட்டு 36 மணி நேரங்களுக்கும் மேலாகியும், தமிழக முதல்வர் ஜோசஃப் விஜய் இது குறித்து எவ்வித வாழ்த்தோ அல்லது வரவேற்புச் செய்தியோ வெளியிடாமல் மௌனம் காப்பது ஏன் என்று பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விடுத்துள்ள அறிக்கையில், மாபெரும் தமிழ் பேரரசனான முதலாம் ராஜராஜ சோழரின் அடையாளச் சின்னமாகவும், தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றுப் பொக்கிஷமாகவும் விளங்கும் ஆனைமங்கல செப்பேடுகள் நம் தாயகம் திரும்பியது தமிழக முதல்வருக்கு பிடிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சீரிய முயற்சியினால் இந்த வரலாற்றுப் பொக்கிஷம் மீட்டெடுக்கப்பட்டதில் முதல்வர் மிகுந்த வருத்தத்தில் உள்ளாரா? அதனால்தான், தனது கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி இதன் மீது சேற்றை வாரி பூசுவதைக் கண்டிக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறாரா?” என்றும், தமிழர்களின் அடையாள மீட்டலை அமைதியாக கடந்து செல்லும் ஒருவர் எப்படி தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பார் என்றும் அவர் சாடியுள்ளார்.
இதேபோல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் முதல்வர் விஜய் அவர்களின் இந்த மௌனத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “சைவ சமயத்தைச் சேர்ந்த மாமன்னர் இராஜராஜ சோழன் ஒரு புத்த விகாரத்துக்காக ஒரு ஊரையே தானம் செய்ததைப் பதிவு செய்யும் விதமாக, மாமன்னர் இராஜேந்திர சோழனால் வடிக்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகளைப் பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளது தமிழக வரலாற்றையே மீட்டெடுக்கும் அதிமுக்கிய நிகழ்வு” என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் தமிழகத்தின் பிரதிநிதி என்ற தார்மீக முறையில் ஒரு சமூக வலைத்தளப் பதிவைக் கூட முதல்வர் பதிவிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசுக்கு நன்றி கூற மனமில்லையா அல்லது தமிழகத்தின் வரலாற்றையே போற்ற மனமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், ஒருபுறம் தாயகம் திரும்பிய செப்பேடுகளை முதல்வர் வரவேற்கத் தயாராக இல்லாத நிலையில், மறுபுறம் அவரது கூட்டணிக் கட்சியினர் அதன் வரலாற்றைத் திரித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக வரலாற்றைப் போற்றும் தவெக அரசின் முறை இதுதானா என்றும், இதற்கு முதல்வர் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் தங்களது பதிவுகளில் வலியுறுத்தியுள்ளனர்.
