தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என தினசரி சுமார் 1.76 கோடி மக்கள் இந்த பேருந்துகளை முழுமையாக நம்பி தங்களின் பயணங்களை மேற்கொள்கின்றனர். இத்தகைய சூழலில், சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் வாகனம் இயக்கும் போதே செல்போனில் பேசுவது, வீடியோ பார்ப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதாக பயணிகள் மத்தியில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன.
குறிப்பாக, ஓட்டுநர்களின் இந்த அலட்சியப் போக்கை பயணிகள் சிலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியதை அடுத்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் திடீர் ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வுகளின் போது, விதிகளை மீறும் ஓட்டுநர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் தற்போது எச்சரித்துள்ளது.
ஏற்கனவே மது அருந்திவிட்டு பணிக்கு வரக்கூடாது, பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும், சத்தமாக பாடல்களை ஒலிக்கக் கூடாது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதாபிமானத்துடன் உதவ வேண்டும் போன்ற பல வழிகாட்டுதல்கள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், செல்போன் பயன்பாட்டினால் அவ்வப்போது பெரும் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதால், தற்போது ஓட்டுநர்கள் பணியின் போது தங்களது சட்டைப்பையில் கூட கைபேசி வைத்திருப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், ஓட்டுநர்கள் பணியின் போது கைபேசியை வைத்திருப்பதோ அல்லது பயன்படுத்துவதோ முற்றிலுமாக தடை செய்யப்படுவதாக திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் பேருந்து நிலையங்கள் மற்றும் வழித்தட ஆய்வின் போது இந்த விதிகளை மீறி ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
