பகீர்.. விமானக் கண்காட்சியில் கோர விபத்து.. நடுவானில் நேருக்கு நேர்.. மோதிக்கொண்ட ராணுவ விமானங்கள்.. வீரர்கள் உயிர் தப்பியது எப்படி..?

By Swetha on வைகாசி 18, 2026

Spread the love

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின் போது, நடுவானில் இரண்டு ராணுவ விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கன்ஃபைட்டர் ஸ்கைஸ்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு ‘EA-18G Growler’ ரக போர் விமானங்கள் வான்வழி சாகசங்களில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

இந்த பயங்கர மோதலுக்குப் பிறகு, இரண்டு விமானங்களும் கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்து நிலத்தில் விழுந்து நொறுங்கின. விபத்து நடந்த உடனேயே அப்பகுதியில் இருந்து அடர்ந்த கருப்புப் புகை வானை நோக்கி எழும்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானப்படை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர், உடனடியாக அந்த விமானப்படைத் தளத்தை முழுமையாகப் பூட்டி (Lockdown) தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், அங்கு நடைபெறவிருந்த மற்ற அனைத்து வான்வழி சாகச நிகழ்ச்சிகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.

   

நடுவானில் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான அந்த இக்கட்டான நொடியில், இரண்டு விமானங்களிலும் இருந்த மொத்தம் 4 விமானப்படை வீரர்கள் (Crew members) சாதுரியமாகச் செயல்பட்டு பாராசூட் மூலம் அவசர அவசரமாக வெளியேறினர். அவர்கள் அனைவரும் பத்திரமாகத் தரையிறங்கியதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவிலான உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும் கடற்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து மீட்புக் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.