உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பர்ரா பகுதியில், 9-ஆம் வகுப்பு படித்து வந்த ஆயுஷ் (14) என்ற மாணவன், தனது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அம்மாணவன் ஒரு கடிதம் எழுதியிருந்த நிலையில், பின்னர் அதனை கிழித்து எறிந்துவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஆயுஷ், தனது அறையை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு இந்த துயரமான செயலை செய்துள்ளார்.
மாணவனின் தந்தையான ராகேஷ் குமார் உத்தரபிரதேச காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். தனது மகனின் மரணத்திற்கு அவன் படித்து வந்த மதர் தெரசா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களே காரணம் என்று அவர் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியர்கள் தனது மகனை தங்களுக்கு கீழ் தனியாக டியூஷன் படிக்க வருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், அவ்வாறு வராததால் தேர்வில் தோல்வியடையச் செய்துவிடுவதாக மிரட்டி, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவனது அறையிலிருந்து துண்டு துண்டாகக் கிழிந்த நிலையில் மீட்கப்பட்ட தற்கொலை கடிதத்தை ஒட்டவைத்து, அதில் எழுதப்பட்டுள்ள விவரங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் மீதான பெற்றோரின் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
