பாமகவின் வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளராகவும், அக்கட்சியின் முக்கிய முகமாகவும் விளங்கிய ‘லயன்’ கே.எஸ்.கோபால், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். தவெகவின் முக்கிய நிர்வாகியான வி.எஸ்.பாபு முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் அவர் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக ஐக்கியமானார். வடசென்னை பகுதியில் பாமகவின் வலுவான தூணாகப் பார்க்கப்பட்ட கே.எஸ்.கோபாலின் இந்த திடீர் இடமாற்றம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் பெரும் மாற்றத்தைக் கண்டு வருகிறது. தவெகவின் ஆட்சிப் பொறுப்புக்கு பிறகு, மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் தவெகவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் பாமகவின் முக்கிய நிர்வாகி தவெகவில் இணைந்திருப்பது, வடசென்னை பகுதியில் தவெகவின் பலத்தை மேலும் அதிகரிப்பதுடன், பிற கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
