“அது நடக்குற வரைக்கும் நான் நடிக்கவே மாட்டேன்”… கதறி அழுத ரவி மோகன்… பார்த்ததும் கலங்கிய ரசிகர்கள்..!

By Nanthini on வைகாசி 16, 2026

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வசித்து வருகிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், இப் பிரச்னையின் பின்னணியில் பாடகி கெனிஷாவின் பெயர் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ரவி மோகனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸில்’ முக்கியப் பங்கு வகித்து வந்த கெனிஷா, பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ரவி மோகனுடன் ஜோடியாக வலம் வந்ததும், கேரள நிகழ்ச்சி ஒன்றில் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றதும் இணையத்தில் பெரும் விவாதப் பொருளானது.

இதனிடையே, சமூக வலைதளங்களில் ஆர்த்திக்கு ஆதரவாகப் பேசியவர்களுக்கு கெனிஷா அளித்த பதிலடிகள் அவதூறாக இருப்பதாகக் கூறி ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆர்த்திக்கு எதிராக எந்த ஊடகத்திலும் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, ‘ஒரு குடும்பத்தைப் பிரிக்க வந்தவர்’ என்ற விமர்சனங்களால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கெனிஷா, இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ரவி மோகன் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு ஒரு தெரபிஸ்டாக மட்டுமே தான் உதவத் தொடங்கியதாகக் குறிப்பிட்டு, இன்னொருவர் குடும்பத்தைக் கெடுக்கத் தான் நினைக்கவில்லை என உருக்கமாகத் தெரிவித்தார்.

   

தொடர் ஆன்லைன் கிண்டல்களாலும், விமர்சனங்களாலும் மனமுடைந்து போன கெனிஷா, தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். நிஜமான அன்பையும் விசுவாசத்தையும் காட்ட இந்த உலகம் தனக்கு இடம்தரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள அவர், சென்னையை விட்டு வெளியேறுவதாகவும், தனது இசை மற்றும் சிகிச்சை பணிகளை முற்றிலுமாகக் கைவிடுவதாகவும் அறிவித்துள்ளார். மேலும், ‘இனி ரவி மோகன் உங்கள் வசம்’ என்று கூறி அவருடனான தொடர்பை முறித்துக் கொண்டு சமூக வலைதளங்களில் இருந்தும் வெளியேறியுள்ளார். கெனிஷாவின் இந்த முடிவு, இந்த விவாகரத்து விவகாரத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

கெனிஷாவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, நடிகர் ரவி மோகன் ஆக்ரோஷமாகவும் வேதனையுடனும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “சாது மிரண்டால் காடுகொள்ளாது. இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம். விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை” என்று அறிவித்த அவர், கடந்த 23 வருடங்களாக இரவு பகலாக உழைத்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றியதாகக் கூறினார். மேலும், தற்போதைய சூழலில் தனது குழந்தைகளைப் பார்க்கத் தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், பள்ளிக்குக் கூட பாதுகாவலர்களுடன் அவர்கள் அனுப்பப்படுவதாகவும் கண்ணீருடன் குற்றம் சாட்டினார்.

 

தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த ரவி மோகன், “கோடிக்கணக்கான சொத்துக்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு, இன்று நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். என் படங்களில் பெண்ணுரிமை பற்றிப் பேசும் நான், பெண்களைத் தவறாகப் பேச மாட்டேன். என்னை ஒரு பெண் புரிந்து கொண்டு வந்தார், இப்போது அவரையும் காலி செய்து அனுப்பிவிட்டார்கள். என் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுத்தம் செய்துவிட்டுத்தான் இனி மீண்டும் திரையுலகிற்கு வருவேன்” என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது ஒட்டுமொத்தத் திரைத்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.