“என் பொண்ணை கொன்னுட்டாங்க!” – கதறும் பெற்றோர்!… நீதிபதி குடும்பத்தின் முகத்திரையை கிழித்த அந்த ஒரு போன் கால்… போபாலில் அரங்கேறிய மர்ம மரணம்…!!!

By Muthu Mani on வைகாசி 16, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 33 வயதான ட்விஷா ஷர்மா, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே புகுந்த வீடு தனக்கு ஒரு நரகமாக மாறிவிட்டதாகத் தனது பெற்றோரிடம் அவர் பலமுறை கூறி அழுதுள்ளார். இந்த நிலையில், கடந்த மே 12ஆம் தேதி இரவு 10:05 மணியளவில், ட்விஷா தனது தாயைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கணவர் வீட்டில் தன்னை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகக் கொடூரமாகத் துன்புறுத்துவதாகக் கதறியுள்ளார். அந்த உரையாடலின் போதே திடீரென அவரது கணவர் அறைக்குள் நுழைந்ததால், ட்விஷா உடனடியாகப் பயத்துடன் அழைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த ட்விஷாவின் குடும்பத்தினர், அவரை மீண்டும் தொடர்பு கொள்ளப் பலமுறை முயன்றும் பலனளிக்கவில்லை. சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு ட்விஷாவின் மாமியார் கிரிபாலா சிங் அழைப்பை ஏற்று, “ட்விஷா மூச்சுவிடவில்லை” என்று மிகச் சாதாரணமாகக் கூறியுள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை வெறும் 10 நிமிடத் தொலைவில் இருந்தபோதிலும், கணவர் குடும்பத்தினர் திட்டமிட்டே மருத்துவ உதவி பெறுவதில் தாமதம் ஏற்படுத்தித் தனது மகளைக் கொன்றுவிட்டதாகப் பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

   

பாதிக்கப்பட்ட ட்விஷாவின் சகோதரரும், இந்திய ராணுவ அதிகாரியுமான மேஜர் ஹர்ஷித் ஷர்மா தனது தங்கை அனுபவித்த கொடுமைகள் குறித்துப் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். ட்விஷா கர்ப்பமாக இருந்த சமயத்தில், அந்தச் சிசு அவளுக்கு ஏற்பட்ட முறையற்ற உறவினால் உருவானது என்று அவதூறு கூறி, குழந்தையைப் பெற்றுக் கொள்ளக் கூடாது எனக் கணவனும் மாமியாரும் கடுமையான மன உளைச்சலைத் தந்துள்ளனர். மேலும், ட்விஷாவின் தந்தை திருமணப் பரிசாக வழங்கிய 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பங்குகள் மற்றும் முதலீடுகளைத் தங்களது பெயருக்கு மாற்றித் தருமாறு வரதட்சணைக் கொடுமையும் செய்துள்ளனர்.

   

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ட்விஷாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ட்விஷா உயிருடன் இருக்கும்போதே அவரது கழுத்தில் கயிறு இறுகித் தூக்கிலிடப்பட்டதாகவும், அவரது உடலில் மரணத்திற்கு முந்தைய பல காயங்கள் இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அவருக்குக் கட்டாய மருத்துவக் கருக்கலைப்பு செய்யப்பட்டிருந்ததும் உறுதியாகியுள்ளது. மாமியார் ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் கணவர் வழக்கறிஞர் என்பதால் சட்டத்தின் துணையோடு ஆதாரங்களைச் சிதைக்கக் கூடும் என அஞ்சும் குடும்பத்தினர், வீட்டை உடனடியாகச் சீல் வைக்கக் கோரியுள்ளனர். தற்போது இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.