சென்னை போரூர், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் தன் மகளுடன் வசித்து வருகிறார். கோடை விடுமுறைக்காக அவருடைய மகள் கடந்த வாரம் வெளியூர் சென்றதால், முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட முதியவர், தனக்கு ஏற்கனவே பழக்கமான அண்ணா நகர் சாந்தி காலனியைச் சேர்ந்த 38 வயது பூ வியாபாரம் செய்யும் பெண்ணை போனில் தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
வீட்டில் இருவரும் தனியாக இருந்த நேரத்தில், அந்தப் பெண் முதியவரின் கவனத்தை நைசாக திசை திருப்பியுள்ளார். முதியவர் கவனிக்காத சமையத்தில், வீட்டின் பீரோவைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 6½ பவுன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிச் சென்றுவிட்டார். நகைகள் களவு போன விஷயம் ஆரம்பத்தில் முதியவருக்குத் தெரியவில்லை; பின்னர் தெரிந்தபோதும், மகளுக்குப் பயந்து இந்த விவகாரத்தை அவர் மறைத்துவிட்டார்.
வெளியூர் சென்றிருந்த மகள் நேற்று வீடு திரும்பியபோது, ஒரு விசேஷத்திற்காக நகை எடுக்க பீரோவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தந்தையிடம் கேட்டுள்ளார். ஆரம்பத்தில் முதியவர் உண்மையை மறைத்து, வீட்டு வேலைக்கு ஒரு பெண் வந்ததாகக் கூறி சமாளித்துள்ளார். ஆனால், மகள் விடாப்பிடியாகக் காரசாரமாகக் கேட்டதால், முதியவர் நடந்த உண்மைகளை ஒப்புக்கொண்டார்.
இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த மகள் உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி சாந்தி காலனியைச் சேர்ந்த அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். சென்னை போன்ற பெருநகரங்களில் தனிமையில் இருக்கும் முதியவர்களைக் குறிவைத்து, நயவஞ்சக வார்த்தைகளால் ஏமாற்றித் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், முதியவர்களை வீட்டில் தனியாக விடும்போது குடும்பத்தினர் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் போலீசாரும் எச்சரிக்கின்றனர்.
