இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில், ஐடி ஊழியர்களுக்கு வாடகை வீடு தேடுவது என்பது குதிரைக் கொம்பான விஷயமாக மாறிவிட்டது. இங்கு நியாயமான வீட்டு உரிமையாளர் அமைவதற்கே போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்ற நிலைதான் நிலவுகிறது. ஐடி நிறுவனங்களின் பெருக்கத்தால் 1BHK, 2BHK வீடுகளுக்கான தேவை ஆண்டு முழுவதும் உச்சத்தில் இருக்கிறது. இந்த அதீத தேவையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில வீட்டு உரிமையாளர்கள், வாடகையைத் தாறுமாறாக உயர்த்தி, எளிய ஊழியர்களின் பாக்கெட்டைக் காலி செய்யும் ‘அமுத சுரபியாக’ இந்தச் சந்தையைப் பார்க்கின்றனர்.
இந்தச் சூழலில், இன்ஸ்டாகிராம் பயனர் திஷாகா என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது வீட்டு உரிமையாளர், நடப்பு வாடகையை விட மாதம் 4,000 ரூபாய் உயர்த்துவதற்காகத் தன்னிடம் ஒரு பொய்யான காரணத்தைக் கூறி ஏமாற்ற முயன்றதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆரம்பத்தில், தனது சகோதரர் பெங்களூருவுக்கு குடிபெயர்வதால் வீட்டை காலி செய்யுமாறு ஓனர் கூறியுள்ளார். ஆனால், அந்த முழு அடுக்குமாடி குடியிருப்பும் அவருக்கே சொந்தமாக இருந்தும், தன்னை மட்டும் காலி செய்யச் சொல்வதில் சந்தேகம் அடைந்த திஷாகா, தொடர்ந்து பேசியபோதுதான் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது.
அந்தப் பகுதியில் தற்போது 1BHK வீடுகள் 26,000 முதல் 28,000 ரூபாய் வரை வாடகைக்கு போவதாக ஓனர் நேரடியாகவே கூறியுள்ளார். இதன் மூலம், தன்னை வெளியேற்றிவிட்டு அதிக வாடகைக்கு புதிய ஆட்களைச் சேர்க்கவே இந்த நாடகம் என்பதை திஷாகா புரிந்து கொண்டார். இறுதியில், பெங்களூருவில் குறுகிய காலத்தில் புதிய வீடு தேடுவது சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும், வேறு இடத்திற்குச் சென்றாலும் கூடுதல் வாடகை தர வேண்டி வரும் என்பதாலும், மனமில்லாமல் அதே வீட்டில் தொடர மாதம் 4,000 ரூபாய் கூடுதலாகத் தர அவர் சம்மதித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பெங்களூருவின் ஐடி காரிடார் பகுதிகளில் வாடகை கட்டணம் விண்ணைத் தொட்டு வருகிறது. வேலைக்காக வரும் இளைஞர்களின் எண்ணிக்கையை முதலீடாகக் கொண்டு, வீட்டு உரிமையாளர்கள் அடிக்கடி வாடகையை உயர்த்துவது தொடர்கதையாகிவிட்டது. திஷாகாவின் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “உங்களுக்கும் இதுபோன்ற கசப்பான அனுபவம் உண்டா?” என்ற கேள்விக்கு, பல நெட்டிசன்கள் தங்களுக்கு நேர்ந்த திடீர் வாடகை உயர்வு, கூடுதல் டெபாசிட் நெருக்கடி மற்றும் கட்டாய காலி செய்தல் போன்ற கொடுமைகளைப் பகிர்ந்து தங்களின் ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்து வருகின்றனர்.
