தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் அதிரடியாக இறங்கியுள்ளார். குறிப்பாக, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்பட்ட ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ குறித்த கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்க அவர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ₹2,500 மற்றும் 60 வயதைக் கடந்த மூத்த குடிமகள்களுக்கு மாதம் ₹3,000 உதவித்தொகை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறியும் முதற்கட்ட ஆய்வுப் பணிகள் தற்போது மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழகப் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
