“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல!” – விஜய் முன்னிலையிலேயே உதயநிதி போட்ட அதிரடி போடு… மீண்டும் பரபரப்பு…!

By Nanthini on வைகாசி 15, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் தேர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் “மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று பேசியது தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் மற்றும் வட இந்திய அரசியல் தலைவர்கள் உதயநிதியின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ள நிலையில், சட்டமன்றத்தில் கிளம்பியுள்ள இந்த ‘சனாதன’ விவாதம் அரசியல் களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.

தன்னை நோக்கி வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் விளக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விமர்சனங்களைக் கண்டு அஞ்சும் ஆள் நான் அல்ல; திராவிட இயக்கம் என்பதே எதிர்ப்புகளுக்கு இடையே வளர்ந்ததுதான்” என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது கருத்தில் பின்வாங்கப் போவதில்லை என்பதையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதை அவர் இந்த அறிவிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

   

சனாதனம் குறித்த தனது விளக்கத்தில், “சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொன்னால், யாரும் கோயிலுக்குப் போகக்கூடாது என்று அர்த்தமல்ல; மாறாக, சமூகத்தில் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே அதன் பொருள். மேல் சாதி – கீழ் சாதி என மக்களைப் பிரிக்கும் பாகுபாடுகளை ஒழிப்பதையே நான் வலியுறுத்துகிறேன். நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் கிடையாது; ஆனால், சமத்துவமின்மையையும், ஒடுக்குமுறையையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று உதயநிதி கூறியுள்ளார்.

   

மேலும், தனது பேச்சு புதியது அல்ல என்றும், பெரியார், அம்பேத்கர், அண்ணா மற்றும் கலைஞர் ஆகிய தலைவர்கள் முன்மொழிந்த கொள்கைகளையே தான் வழிமொழிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவரின் வரிகளே திராவிட இயக்கத்தின் அடிப்படைப் பாதை என்று குறிப்பிட்ட உதயநிதி, மனிதர்களைப் பிரிக்கும் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.