அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் செல்லாது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும், தோல்விக்கான காரணங்களை ஆராய உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, மே 5-ம் தேதி முதல் கட்சியில் கருத்து வேறுபாடுகள் முற்றியுள்ள நிலையில், அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட நீக்கங்கள் மற்றும் புதிய நியமனங்கள் சட்டப்படி செல்லாது என்பது வேலுமணி தரப்பின் வாதமாக உள்ளது.
இந்த மோதலின் ஒரு பகுதியாக, எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட 17 முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வேலுமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் சட்டசபை சபாநாயகரைச் சந்தித்து சட்டசபைக் குழுத் தலைவர் மற்றும் கொறடா தொடர்பாகக் கடிதம் அளித்துள்ளனர். கட்சி அமைப்பு வேறு, சட்டசபை அமைப்பு வேறு என்று கூறியுள்ள வேலுமணி, எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அந்தந்தப் பதவிகளிலேயே நீடிப்பார்கள் என்று அறிவித்துள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை மீண்டும் வலுப்படுத்த சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றிணைக்க வேண்டும் என்ற விவாதங்களும் தற்போது சூடுபிடித்துள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்குலத்தோர், வன்னியர் மற்றும் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் ஓரணியில் திரண்டுள்ளதால், அவர் கட்சியில் ஓரங்கட்டப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. விஜயபாஸ்கர், சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகிய மூவரின் கூட்டுத் தலைமையின் கீழ் இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதால், அதிமுகவில் அதிகார மைய மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய வேலுமணி, எடப்பாடி பழனிசாமி ‘போங்க போங்க’ என்று எல்லாரையும் நீக்கிக் கொண்டிருக்காமல், ‘வாங்க வாங்க’ என்று அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்துவிட்டு பொதுக்குழுவின் மூலம் ஜனநாயக ரீதியாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களால் தமிழக அரசியலில் அதிமுகவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் முன்னைவிட அதிகமாகியுள்ளன.
