தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் பேசியதற்காக, மன்னார்குடி தொகுதி அமமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தன்னிச்சையாகச் செயல்பட்டு கட்சி ஒழுங்கை மீறியதாகவும், வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் கூறி இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கத்தைக் கண்டித்து காமராஜின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தங்களது பலத்த எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
டிடிவி தினகரனின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமமுகவின் முக்கிய நிர்வாகியும், தலைவராளர் கழக செய்தித் தொடர்பாளருமான அபுதாஹிர் தனது கட்சிப் பதவியையும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ காமராஜ் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பலரும் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதால் அமமுக வட்டாரத்தில் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
