இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறிவிட்ட நிலையில், அதன் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2026-ஆம் ஆண்டிற்கான புதிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஆதார் பெறும் முறையை நவீனப்படுத்துவதுடன், ஆவணச் சரிபார்ப்பை முன்பை விட அதிகக் கடுமையானதாக்கியுள்ளன. தற்போது மின்னணு வாக்காளர் அடையாள அட்டை, திருமணச் சான்றிதழ், மின்சாரக் கட்டண ரசீது மற்றும் பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் செல்லுபடியாகும் ஆவணங்களின் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்படி, சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆவணங்களும் காலாவதியாகாமல் (Valid) இருக்க வேண்டியது அவசியமாகும். அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படும் ஆவணத்தில் விண்ணப்பதாரரின் பெயரும் புகைப்படமும் தெளிவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குடும்பத் தலைவர் (HoF) அடிப்படையிலான விண்ணப்பங்களில், விண்ணப்பதாரருக்கும் குடும்பத் தலைவருக்கும் இடையிலான உறவுமுறைச் சான்றிதழில் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதை UIDAI தெளிவுபடுத்தியுள்ளது. இது தரவுகளின் துல்லியத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் முயற்சியாகும்.
குழந்தைகளுக்கான ஆதார் பதிவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் மிக முக்கியமான ஆவணமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் பதிவின் போது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆவணங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 5 முதல் 18 வயது வரையிலானவர்களுக்குக் குடும்பத் தலைவர் அடிப்படையிலான பதிவு முறையே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேபோல், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் காப்பகங்களில் வசிப்பவர்களுக்கு ஆதார் பெறுவதை எளிதாக்கும் வகையில் சிறப்புச் சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (OCI) விதிகளிலும் தெளிவான கால வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. OCI அட்டைதாரர்கள் மற்றும் நேபாளம், பூட்டான் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். மற்ற வெளிநாட்டினரைப் பொறுத்தவரை, அவர்களின் விசா காலம் முடியும் வரை மட்டுமே ஆதார் அட்டை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திருத்தங்கள் ஆதார் முறையை மிகவும் வெளிப்படையானதாகவும், அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
