நீட் தேவையில்லை… +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை.. முதல்வர் விஜய் அறிக்கை..!!

By Soundarya on வைகாசி 13, 2026

Spread the love

மருத்துவக் கல்வி என்பது தகுதி படைத்த அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பாக அமைய வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமேயானதாகச் சுருங்கிவிடக் கூடாது என்று முதல்வர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு என்பது கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவைச் சிதைக்கும் ஒரு பெரும் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கையான நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் மாணவர்களுக்குப் கூடுதல் மன அழுத்தத்தைத் தருவதோடு, பயிற்சி மையங்களுக்குச் செல்ல வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மாற்றாக, மாணவர்களின் பன்னிரண்டாம் வகுப்பு (+2) பொதுத்தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதே மாநில அரசின் உறுதியான நிலைப்பாடு என்று முதல்வர் தெரிவித்தார். பல ஆண்டுகள் பள்ளியில் பயின்று பெற்ற மதிப்பெண்களைப் புறக்கணித்துவிட்டு, ஒரே ஒரு தேர்வின் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதற்கான சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.