கிருஷ்ணகிரி மாவட்டம், பாலகுறி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் குமாருக்கும் அவரது மனைவி பானுப்பிரியாவிற்கும் இடையே, அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் என்பவருடனான திருமணத்தை மீறிய உறவு காரணமாக மோதல் வெடித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த மகேஷ் குமார், விடுமுறையில் ஊருக்குத் திரும்பியபோது தனது மனைவியின் செல்போனை ஆய்வு செய்ததில் இந்தத் தகாத உறவை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அறிந்த கள்ளக்காதலன் பூவரசன், அன்று நள்ளிரவு மகேஷ் குமாரின் வீட்டிற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த பூவரசன், கத்தியால் மகேஷ் குமாரை குத்தியதுடன், தடுக்க வந்த அவரது தந்தை செல்லப்பனையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைப்பதற்காக, இருவரது உடல்களையும் பெட்ஷீட்டில் கட்டி எடுத்துச் சென்று, கொடுகூர் மற்றும் வெப்பாலம்பட்டி ஆகிய பகுதிகளில் தனித்தனியாகப் போட்டு தீ வைத்து எரித்துள்ளனர்.
அடுத்த நாள் எரிக்கப்பட்ட நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பானுப்பிரியா மற்றும் பூவரசன் இணைந்து இந்த இரட்டைக் கொலையைச் செய்தது அம்பலமானது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தில் பானுப்பிரியாவின் 10 வயது மகனும் கொலைக்கு உடந்தையாக இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
