உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் (Instagram) காதல் காரணமாக 24 வயது இளைஞர் ஒருவர் 45 வயது விதவைப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அந்தப் பெண்ணின் மீது அதீத ஈர்ப்பு கொண்ட இளைஞர், தனது வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக ஒரு கோவிலில் வைத்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆகிறது. முதல் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இந்தத் திடீர் முடிவை அவர் எடுத்துள்ளார். தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, அந்த இளைஞரை மீண்டும் வீட்டிற்குள் சேர்க்க அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். வயதைக் கடந்து இன்ஸ்டாகிராமில் மலர்ந்த இந்த விநோதக் காதல் அம்ரோஹா பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
