சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பரபரப்பான சந்தைப் பகுதி ஒன்றில் பல மாடி கட்டிடம் ஒன்று பலத்த காற்றினால் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் காட்சியைப் பார்த்த பயனர்கள் அதிர்ச்சியடைந்து, இது உண்மைச் சம்பவம் என நம்பி வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் வேகமாகப் பகிர்ந்து வந்தனர். “திடீரென வீசிய பலத்த காற்றினால் கட்டிடம் காகிதம் போல விழுந்தது” என்ற வாசகத்துடன் இந்த வீடியோ பரப்பப்பட்டது.
இந்த வீடியோ குறித்து மேற்கொள்ளப்பட்ட உண்மைத் தன்மையின் முடிவில், இது முற்றிலும் போலியானது என்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோவைச் சட்டக வாரியாக ஆய்வு செய்தபோது, இது நிஜமான நிகழ்வு அல்ல என்பதும், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி வரைகலை மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வீடியோ என்பதும் உறுதி செய்யப்பட்டது. வீடியோவில் மக்களின் அசைவுகள், ஆட்டோ ரிக்ஷா குதிக்கும் விதம் போன்றவை எதார்த்தத்திற்கு மாறாக, வீடியோ கேம் காட்சிகளைப் போல அமைந்துள்ளதை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்தியாவில் இப்படி ஒரு பெரிய விபத்து நடந்திருந்தால் அது தேசிய அளவில் முக்கிய செய்தியாகியிருக்கும். ஆனால், கூகுள் ஃபேக்ட் செக் எக்ஸ்ப்ளோரர் போன்ற நம்பகமான தளங்களில் இது குறித்து எந்தத் தகவலும் இல்லை. வெறும் பார்வையாளர்களைக் கவர்வதற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும் இது போன்ற எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே, சமூக வலைதளங்களில் வரும் இத்தகைய வியப்பூட்டும் காட்சிகளை உண்மை என நம்பி மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்று செய்தி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
