திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குவதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி, பக்தர்களிடம் நூதன முறையில் திருடும் கும்பல் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கோவில் ராஜகோபுரம் அருகே கண்டெய்னர் பாக்ஸ் வைத்துள்ள ஒரு கும்பல், சிறுவர்களைக் கொண்டு பக்தர்களுக்கு ‘வேல் பொட்டு’ வைத்துவிட்டு, அவர்களின் உடைமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி ஏமாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்தபோது, இந்த கும்பலிடம் ஏமாந்து தனது செல்போனைப் பறிகொடுத்துள்ளார். கோவிலில் உடைமைகளைப் பாதுகாக்க முறையான அறைகள் இருந்தும், விவரம் தெரியாத பக்தர்களிடம் இதுதான் பாதுகாப்பான இடம் என்று கூறி 30 ரூபாய் பெற்றுக்கொண்டு பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். மாதேஷ் தனது பொருட்களைத் திரும்பப் பெற்றபோது செல்போன் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் சிறுவனைப் பிடித்துக் கொடுத்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கத் தாமதிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்செந்தூர் கடற்கரை மற்றும் கார் நிறுத்துமிடங்களில் பக்தர்களின் உடைமைகள் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பாதிக்கப்பட்ட பக்தர்கள் புகார் அளித்தால், மீண்டும் மீண்டும் திருச்செந்தூருக்கு விசாரணைக்காக அலைய வேண்டியிருக்கும் என்பதால், பலர் புகாரைப் பெயரளவில் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் உள்ளூர் போலீசார், திருட்டுச் சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்துவதில்லை என்ற அதிருப்தி பக்தர்களிடையே நிலவுகிறது.
தற்போது கோவில் வளாகத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 பேர் தங்கி, ‘வேல் பொட்டு’ வைப்பதாகக் கூறி பக்தர்களை அணுகி வருகின்றனர். இவர்களில் ஒரு சிலரே இத்தகைய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய கும்பல்களைக் கண்டறிந்து, இனிவரும் காலங்களில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
