பகீர்!.. கோவிலுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்.. 10 வயது சிறுவனை கொன்று தின்ற சிறுத்தை.. கதறும் பெற்றோர்…!!!

By Muthu Mani on வைகாசி 11, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில், சிறுத்தை தாக்கியதில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஹர்ஷித் என்ற சிறுவன், தனது குடும்பத்தினருடன் நேற்று காலை நாகமலை நோக்கி பாதயாத்திரை சென்றபோது, புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று மின்னல் வேகத்தில் பாய்ந்து அவனை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்தர்களும் வனத்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், சிறிது தூரத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டான்.

இந்தக் கொடூரமான தாக்குதலில் சிறுவனின் உடலின் சில பாகங்களைச் சிறுத்தை கடித்துக் குதறியிருந்தது. வனத்துறையினரின் அலட்சியமே இந்தப் பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள உள்ளூர் மக்களும் பக்தர்களும், அதிகாரிகளை முற்றுகையிட்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்கொல்லியாக மாறியுள்ள அந்தச் சிறுத்தையை உடனடியாகச் சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அவர்கள் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளனர்.

   

தற்போது நிலவும் பதற்றமான சூழல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நாகமலை செல்லும் பாதையில் மலையேற்றம் செய்வதற்கு வனத்துறை தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள், சிறுத்தையைப் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியான சிறுத்தை நடமாட்டத்தால் மாதேஸ்வரன் மலைக்கு வரும் பக்தர்கள் தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.