விஜய் கொடுத்த பவர்.. அலறும் எதிர்க்கட்சிகள்!” – கொங்கு மண்டலத்தின் புதிய ‘கிங்’ செங்கோட்டையன்… பின்னணியில் நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தை…!

By Nanthini on வைகாசி 11, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. தமிழக அரசியலை ‘தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின்’ என இரண்டாகப் பிரிக்கும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவருடன் ஆனந்த், ஆதவ் மற்றும் அருண்ராஜ் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதில் குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் மூத்த அரசியல் முகமான செங்கோட்டையன் அமைச்சராகப் பதவியேற்றது தமிழக அரசியலில் பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது.

   

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில், திமுகவும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டப் போராடிய நிலையில், தவெக அங்கு அதிக இடங்களைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த இமாலய வெற்றிக்குக் காரணமாக அமைந்தவர் எம்ஜிஆர் காலத்து சீனியரான செங்கோட்டையன். கடந்த ஆண்டு விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்த இவருக்கு, கொங்கு மண்டலத்தை வலுப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் செங்கோட்டையனின் முடிவைக் கிண்டல் செய்தவர்கள் மற்றும் தயக்கம் காட்டியவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தேர்தல் முடிவுகள் தவெகவிற்குச் சாதகமாக அமைந்தன.

   

தவெகவின் கொங்கு மண்டல முகமாக உருவெடுத்துள்ள செங்கோட்டையன் மீது முதலமைச்சர் விஜய் மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் வைத்துள்ளார். செங்கோட்டையன் அமைச்சராகப் பதவியேற்ற போது விஜய் எழுந்து நின்று உற்சாகப்படுத்தியது இவர்களுக்கிடையிலான இணக்கத்தை வெளிப்படுத்தியது. தேர்தலுக்கு முன்பாக திமுக மற்றும் அதிமுகவின் அதிருப்தி சீனியர்களை ஒருங்கிணைக்க அவர் மேற்கொண்ட நேரடிப் பேச்சுவார்த்தைகள் இப்போது பலன் கொடுக்கத் தொடங்கியுள்ளன. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது திமுக மற்றும் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகள், சிட்டிங் நகராட்சி மற்றும் ஊராட்சித் தலைவர்கள் எனப் பலரும் செங்கோட்டையனைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இப்போதே தவெகவில் இணைந்தால் அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர். இதனால் கொங்கு மண்டலத்தில் விரைவில் மாற்றுக்கட்சியிலிருந்து தவெகவிற்குப் பெரிய அளவிலான கட்சித் தாவல்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.