கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலை அரங்கேறியுள்ள இரட்டைக்கொலை சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. பூவத்தி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுகூர் பகுதியில், மர்ம நபர்களால் பெட்ஷீட்டில் சுற்றப்பட்டு, தென்னை ஓலைகள் மற்றும் பெட்ரோல் உதவியுடன் எரிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி விலகுவதற்குள்ளாகவே, அங்கிருந்து சரியாக அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெப்பாலம்பட்டி பகுதியிலும், அதே பாணியில் மற்றொரு வாலிபரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், பாதி எரிந்த நிலையில் இருந்த இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நாளில், மிக அருகருகே இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் எரிக்கப்பட்டிருப்பது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அந்தப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விபரங்கள் இதுவரை தெரியவில்லை. மர்ம நபர்கள் இவர்களை வேறு எங்காவது கொலை செய்துவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க இந்த ஒதுக்குப்புறமான சாலையில் வீசி எரித்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக இந்தச் செயல் நடந்ததா? எனப் பல கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த இரு கொலைச் சம்பவங்களால் கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
