ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

By Swetha on வைகாசி 10, 2026

Spread the love

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650 அபராதம் செலுத்த நேரிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஜோத்பூர் அருகிலுள்ள ராய்கா பாக் நிலையத்தில் ஏற வேண்டிய அந்தப் பயணி, அங்கு ஏறாமல் இரண்டு மணி நேரம் கழித்து பாலி மார்வார் நிலையத்தில் ரயிலில் ஏறியுள்ளார்.

இரயில்வே விதிகளின்படி, ஒரு பயணி தான் குறிப்பிட்ட போர்டிங் நிலையத்தில் ரயிலில் ஏறவில்லை என்றால், TTE அந்த இருக்கையை ‘நோ-ஷோ’ எனப் பதிவு செய்துவிட்டு, அதை RAC அல்லது காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ஒதுக்கி விடுவார். போர்டிங் பாயிண்டை மாற்ற விரும்பினால், ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே ஆன்லைனில் அல்லது கவுண்டர்களில் மாற்றியிருக்க வேண்டும். இந்த விதியை அந்தப் பயணி பின்பற்றாததால், அவர் டிக்கெட் இன்றி பயணிப்பவராகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

   

இது தொடர்பான வீடியோவில், அந்தப் பெண்ணுக்கும் டிடிஇ-க்கும் (TTE) இடையே கடும் வாக்குவாதம் நடப்பதைக் காண முடிகிறது. அந்த அதிகாரி கோபமாகப் பேசுவது விமர்சனத்திற்கு உள்ளானாலும், தொழில்நுட்ப ரீதியாக அவர் விதிகளையே பின்பற்றியதாக இரயில்வே தரப்பு தெரிவிக்கிறது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கையில் இருந்தாலும், சரியான நிலையத்தில் ஏறாவிட்டால் உங்கள் இருக்கை பறிபோகும் என்பதையும், அபராதம் விதிக்கப்படும் என்பதையும் இந்தச் சம்பவம் பயணிகளுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.