மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளால் உலக அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 126 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக ஹாங்காங்கில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹295 வரையிலும், நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் ₹200-ஐத் தாண்டியும் விற்கப்படுகிறது. பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் திணறி வரும் நிலையில், உலகளவில் இது ஒரு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உலகமே பெட்ரோல் விலையேற்றத்தால் தவித்து வரும் சூழலில், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ₹95 என்ற அளவில் நிலையாக நீடிப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹10 வரை குறைத்து, நுகர்வோர் மீதான சுமையைத் தன்வசம் ஏற்றுக்கொண்டதே இதற்கு முக்கியக் காரணம். மேலும், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆதாரங்களை விரிவுபடுத்தியதும், உள்நாட்டு எத்தனால் கலப்பை 20% ஆக உயர்த்தியதும் இந்தியாவின் இந்த ஸ்திரத்தன்மைக்கு வலு சேர்த்துள்ளன.
இருப்பினும், இந்த விலைக் குறைப்பைத் தக்கவைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் (IOC, BPCL, HPCL) நாளொன்றுக்கு சுமார் ₹1,000 கோடி வரை இழப்பைச் சந்தித்து வருகின்றன. ஏப்ரல் இறுதி வரை இந்த நிறுவனங்களுக்கு ₹30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் பட்சத்தில், இந்த நிலை நீண்ட காலத்திற்குச் சாத்தியமில்லை என்றும், மே மாத பாதியில் பெட்ரோல் விலையில் சிறிய மாற்றம் (லிட்டருக்கு ₹4-5) இருக்கக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
